திண்டுக்கல்
1,000 அடி பள்ளத்தில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை
|புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் விழுந்த என்ஜினீயரை, 1,000 அடி பள்ளத்தில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடினர்.
நீர்வீழ்ச்சியில் விழுந்த என்ஜினீயர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய்பாண்டியன் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், திண்டுக்கல் மாவட்டம் மங்களம்கொம்பு பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.
நேற்று இவர், தனது நண்பர் கல்யாணசுந்தரம் (25) என்பவருடன் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றார். அப்போது, நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்றபடி அஜய்பாண்டியன் 'போஸ்' கொடுத்தார்.
அதனை செல்போனில் பல்வேறு விதங்களில் கல்யாணசுந்தரம் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென பாறை வழுக்கி அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விட்டார். இதில் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
அபாயகரமான பள்ளத்தாக்கு
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று அஜய்பாண்டியனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் 2-வது நாளாக தீயணைப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் புனிதராஜ், அழகேசன், மயில்ராசு, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து தீயணைப்பு படை வீரர்கள் 22 பேர் தேடினர்.
அஜய்பாண்டியன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகுதியில், அபாயகரமான பள்ளத்தாக்கு உள்ளது. அது, சுமார் 1,000 அடி ஆழம் கொண்டது என்று கூறப்படுகிறது. அதில் சுமார் 10 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அஜய்பாண்டியன் அந்த பகுதிக்கு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காட்டாற்று வெள்ளம்
இதன் எதிரொலியாக, பாறையில் உள்ள மரங்களில் கயிறுகளை கட்டி தீயணைப்பு படையினர் பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கி தேடினர். இன்று காலை முதல் அப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் தீயணைப்பு படையினர் பள்ளத்தாக்கில் இறங்கினர்.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் அஜய்பாண்டியனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தொடர்மழை பெய்ததால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல் காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அஜய்பாண்டியனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
அணையில் கண்காணிப்பு
புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு கீழே அடுத்தடுத்து 2 அருவிகள் உள்ளன. தற்போது அந்த அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கரைபுரண்டு ஓடும் இந்த காட்டாற்று தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணையில் சங்கமிக்கிறது. இதனால் அந்த பகுதியிலும் தீயணைப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
2-வது நாளாக நடந்த தேடுதல் பணியிலும் அஜய்பாண்டியன் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், அவருடைய குடும்பத்தினர் கவலை அடைந்து கதறி அழுதனர். அஜய்பாண்டியன் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. 3-வது நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) அஜய்பாண்டியனை தீயணைப்பு படையினர் தேட உள்ளனர்.