காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மசாவு - போலீசார் விசாரணை
|காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ் (வயது 34). இவர் சங்கீதா (30) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்ததாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுஅருந்திவிட்டு வந்த சதீசுக்கும், மனைவி சங்கீதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, சங்கீதா வீட்டின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கிடைத்த தகவலின்பேரில், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார், சங்கீதாவை அவருடைய கணவர் சதீஷ் அடித்துக் கொலை செய்தாரா?அல்லது தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.