< Back
மாநில செய்திகள்
பூசிவாக்கம் ஊராட்சியில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்கள் பறிப்பு - கலெக்டர் நடவடிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பூசிவாக்கம் ஊராட்சியில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்கள் பறிப்பு - கலெக்டர் நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Oct 2023 2:41 PM IST

பூசிவாக்கம் ஊராட்சியில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்களை பறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற லெனின் குமார் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தேர்வான துணைத் தலைவர சாமுண்டீஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூசிவாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு கூட ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக கிராம மக்களின் அடிப்படை தேவைகளை கூட ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் குமார் அவதிப்பட்டு வந்தார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில்,

புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி பூசிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விடாமல் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள விடாமல் உள்ளனர் என்பது ஊராட்சி ஆவணங்கள் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 (3ன்) கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

அதனை ஏற்று ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள லெனின் குமாருக்கு 6 மாத காலத்திற்கு கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் கடமைகளை தனது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்படுவதாகவும் இந்த காலகட்டத்தில் கிராம ஊராட்சி கூட்டம் எதுவும் நடத்த தேவையில்லை எனவும் உத்தரவிடப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமுண்டீஸ்ரி , 5 வார்டு உறுப்பினர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்