காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலி: நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
|தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது குறித்து எச்சரிக்கும் வகையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
ஏற்கனவே மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக துத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனறு ராதாபுரம் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை, கூட்டபுளி, கூடுதாழை உள்பட 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 7 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.