< Back
மாநில செய்திகள்
வாக்குப்பெட்டிகள்-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வாக்குப்பெட்டிகள்-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 'சீல்' வைப்பு

தினத்தந்தி
|
11 July 2022 12:53 AM IST

வாக்குப்பெட்டிகள்-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி வாக்குப்பெட்டிகள்-மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தஞ்சை மாவட்டத்தில் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. அதன்படி அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 9-வது வார்டு, கிராம ஊராட்சிகளான பூதலூரில் 6-வது வார்டு, தஞ்சை ஒன்றியத்தில் உள்ள தென்பெரம்பூரில் 2-வது வார்டு, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் 3-வது வார்டு, கோவிந்தபுரத்தில் 8-வது வார்டு, அம்மாப்பேட்டை ஒன்றியத்தில்உள்ள வடபாதியில் 3-வது வார்டு, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது வார்டு, கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 9-வது வார்டு, பாபநாசம் ஒன்றியத்தில்உள்ள சக்கராபள்ளியில் 3-வது வார்டு ஆகிய 8 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் நடைபெற்றது. கிராம ஊராட்சி வார்டுகளில் 69.13 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரி வாக்கு பதிவு 71 சதவீதம் ஆகும். இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி வாக்குப்பெட்டிகளும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தென்பெரம்பூர் 2-வது வார்டில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பூதலூர், திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கிராம ஊராட்சி வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி வார்டில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்