சேலம்
54 பேருக்கு வைப்பீட்டு பத்திரங்கள்
|முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் 51 பேருக்கு வைப்பீட்டு பத்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் 51 பேருக்கு வைப்பீட்டு பத்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
சிறப்பு முகாம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கி 51 பேருக்கு வைப்பீட்டு பத்திரங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. இதன்மூலம் பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல், பெண் சிசுக்கொலை ஒழித்தல் போன்ற பெண் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண் குழந்தைகள்
இத்திட்டத்தின்படி ஒரு பெண் குழந்தை இருந்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பீடு செய்யப்படும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தையின் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு 18 வயது முடிந்த பின் முதிர்வுத்தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். தற்போது இந்த முகாமில் 51 பேருக்கு ரூ.12 லட்சத்து 94 ஆயிரம் வைப்பீட்டு பத்திரங்கள் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமூகநல விரிவாக்க அலுவலர்கள் அல்லது மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.