< Back
மாநில செய்திகள்
கட்டிட என்ஜினீயர் மீது துறை ரீதியான நடவடிக்கை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

கட்டிட என்ஜினீயர் மீது துறை ரீதியான நடவடிக்கை

தினத்தந்தி
|
27 Oct 2023 12:01 AM IST

நாட்டறம்பள்ளி அருகே 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பள்ளி மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததை தொடர்ந்து கட்டிட என்ஜினீயர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி கள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டன.

இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு அவர் கூறியதாவது:-

நடவடிக்கை

கள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு சிறிது கீழே விழுந்துள்ளது. எனவே பள்ளி முழுவதும் உட்புறம் உள்ள அனைத்து சிமெண்டு பூச்சும் அகற்றப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும். அதனால் இனிவரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உட்புறம் பூச்சு சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பள்ளி கட்டிடம் கட்டிய என்ஜினீயரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர் கட்டிய மற்ற கட்டிடங்களில் இதேபோல் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்