< Back
மாநில செய்திகள்
நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது
மாநில செய்திகள்

நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது

தினத்தந்தி
|
11 July 2022 12:18 AM IST

திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவிபோல் குடும்பம் நடத்திய இளம்பெண்ணை, நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த 30 வயது இளம்பெண், சேலையூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன எனக்கு, ஷெரின் என்பவர் மூலம் அதே பகுதியை சேர்ந்த பல் டாக்டரான நிஷாந்த்(வயது 32) என்பவர் அறிமுகம் ஆனார். நிஷாந்த், "எனக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனால் அவரோடு நான் நெருங்கி பழகினேன். இருவரும் பல்வேறு இடங்களில் நடந்த விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்தோம். அவர் கேட்கும்போது எல்லாம் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து வந்தேன்.

நண்பர்களுடன் உல்லாசம்

அத்துடன் திருமணம் செய்யாமலேயே நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் நிஷாந்த் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்தோம். இந்த விஷயம் நிஷாந்தின் தாயார் சத்யாவுக்கு தெரியும்.

அதன்பிறகு போதை வஸ்துகளை பயன்படுத்த தொடங்கிய நிஷாந்த், என்னை அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு மறுத்த நான், இதுபற்றி நிஷாந்தின் தாயார் சத்யாவிடம் கூறினேன். அதற்கு அவர், "என் மகன் அப்படிதான். பிடிக்கவில்லை என்றால் விலகி விடு" என்று கூறிவிட்டார்.

மேலும் நான், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க மறுத்ததால் நிஷாந்த் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி இருந்தார்.

பல் டாக்டர் கைது

அதன்பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இளம்பெண் அளித்த புகார் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து பல் டாக்டர் நிஷாந்த், அவரது நண்பர்களான ஷெரின், ஹர்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களுக்கு போதை வஸ்துகள் எங்கிருந்து கிடைத்தது? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்