மதுரை
மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு
|பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராஜவல்லிபுரம் பா.ஜ.க. தலைவராக உள்ளேன். பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு எங்களது கிராமத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் ஆகியவை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு உரிய அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் விண்ணப்பித்து உள்ளோம். இதுவரை அனுமதிக்கவில்லை. எனவே பிரதமரின் பிறந்தநாள் விழாவையொட்டி கொண்டாட்டத்திற்கு உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் வக்கீல், இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். எனவே இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு நீதிபதிகள், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது தான். அதில் பாரபட்சம் கூடாது. பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்டங்கள் வழங்கலாம். இனிப்பு வழங்கலாம். ஆனால் மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பது கிடையாது. ஏற்கனவே இதுபோன்ற போட்டிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது என்றனர். மேலும் இந்த வழக்கு குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.