< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து வைக்கப்பட்ட பலகையை அகற்றிய அதிகாரிகள்: கனகசபை கதவை திறக்க தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து வைக்கப்பட்ட பலகையை அகற்றிய அதிகாரிகள்: கனகசபை கதவை திறக்க தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:15 AM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து வைக்கப்பட்ட பலகையை அதிகாரிகள் அகற்றினர். இருப்பினும் தீட்சிதர்கள் கனகசபை கதவை திறக்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம்,

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. இதில் சிகர நிகழ்ச்சியான ஆனிதிருமஞ்சன தரிசனம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதற்கிடையே கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கூறி, கடந்த 24-ந்தேதி காலை பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று, கனகசபை நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டது. அந்த பலகையில், 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என எழுதியிருந்தனர்.

விலைமதிப்புள்ள நகைகள்

இதற்கு பக்தர்களும், தீட்சிதர்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தொிவித்து இந்து சமய அறநிலையத்துறையினரிடம் புகார் செய்தனர். இதையடுத்து, 24-ந்தேதி காலை தில்லைகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் போலீசார் அந்த அறிவிப்பு பலகையை அகற்ற சென்றனர்.

அப்போது அதில் எழுதியிருந்த வாசகத்தை செயல் அலுவலர் சரண்யா தனது உதவியாளர் உதவியுடன் அழித்தார். அப்போது கடுயைமான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் செயல் அலுவலர் சரண்யா மற்றும் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கனக சபையில் விலைமதிப்புள்ள நகைகள் அதிகமாக உள்ளது. மேலும் மூலவர் நடராஜர் தேரோட்டம் மற்றும் திருமஞ்சன விழாவுக்காக வெளியே வந்துவிடுவார். எனவே அங்கு பாதுகாப்பு கருதி பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து, அதிகாரி அழித்த அறிவிப்பு பலகையில் மீண்டும் தீட்சிதர்கள் தங்களது அறிவிப்பை எழுதினர்.

அறிவிப்பு பலகை அகற்றம்

இந்த நிலையில் நேற்று தரிசன விழா முடிந்த நிலையில், மூலவர் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மதியம் 2.30 மணியளவில் சித்சபைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கனகசபையில் இருந்து பக்தர்கள் வழக்கம் போல் மூலவர் நடராஜரை தரிசனம் செய்தற்கு ஏதுவாக, அதிகாரிகள், அங்கு தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி, மாலை 4 மணிக்கு சிதம்பரம் உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, சிதம்பரம் தாசில்தார் செல்வக்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் ஆகியோர் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று, கனகசபை நுழைவு வாயில் முன்பு இருந்த பலகையை அகற்றினார்கள்.

இருப்பினும் கனகசபையின் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் இதன் வழியாக சென்று நடராஜரை தரிசனம்செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் மாலை 6.30 மணி அளவில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கனகசபையை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தீர்த்தர்களிடம் கூறினர். ஆனால் அங்கிருந்த தீட்சிதர்கள் நாங்கள் செயலாளரிடமும், நிர்வாகத்தினரிடமும் பேசித்தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடராஜர் கோவில் செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தீட்சிதர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அனுமதி மறுப்பு ஏன்?

இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில், ஆனித்திருமஞ்சன தரிசனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தின் போது, 8,9,10 மற்றும் 11-ம் நாள் ஆகிய திருவிழா நாட்களில் மூலவர் நடராஜர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறை காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இந்த வழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படியே தற்போது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

உள்நோக்கத்தோடு...

இதற்கிடையே, கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர், கோவில் வக்கீல் ஜி.சந்திரசேகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இக்கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற உள்நோக்கத்தோடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசின் நோக்கம் ஏதாவது ஒரு வகையில் பொதுதீட்சிதர்களை தூண்டிவிட்டு, அவர்கள் மீது மென்மேலும் குற்ற வழக்குகளை பதிவு செய்வது என்பது நன்றாக தெரிகிறது.

அதிகார துஷ்பிரயோகம்

கோவிலில் வெளியூர் பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை, அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் 200 போலீசார், கோவிலுக்கு வந்து அகற்றி எடுத்து சென்றுள்ளனர். இதை தீட்சிதர்கள் யாரும் எதிர்க்கவில்லை.

ஆனால், இது காவல்துறையை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும். சட்டரீதியாக நாங்கள் சந்திக்க தயார். நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்வோம். நாங்கள் நடராஜரையும், நீதிமன்றத்தையும் நம்பி உள்ளோம் என்று தெரிவித்தனர்.

தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதில்,அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் படி கடந்த 24-ந்தேதி நடராஜர்கோவிலுக்க சென்றேன். அப்போது அங்கிருந்த அறிவிப்பு பலகையை அகற்ற கூறியபோது, பணி செய்யவிடாமல் தடுத்து விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில், கொலை மிரட்டல், மகளிர் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் செய்திகள்