< Back
மாநில செய்திகள்
அக்காள் மகள் திருமணத்திற்கு விடுமுறை மறுப்பு: மனஉளைச்சலில் வீடியோ வெளியிட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
மதுரை
மாநில செய்திகள்

அக்காள் மகள் திருமணத்திற்கு விடுமுறை மறுப்பு: மனஉளைச்சலில் வீடியோ வெளியிட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

தினத்தந்தி
|
15 Aug 2023 1:30 AM IST

அக்காள் மகள் திருமணத்திற்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் மனஉளைச்சலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீடியோ வெளியிட்டார்.


மதுரை செல்லூர் குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்டாலின்அப்பன்ராஜ் (வயது 50). இவர் அதே போலீஸ் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருகிற 20-ந் தேதி இவரது அக்காள் மகள் திருமணம் நடக்கிறது. இவர் தாய்மாமன் என்பதால் திருமணத்திற்கு செல்வதற்காக இன்ஸ்பெக்டர் வேதவள்ளியிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு விடுமுறை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது சொந்த அக்காள் மகள் திருமணத்திற்கு தாய்மாமன் என்ற முறையில் செல்வதற்காக விடுமுறை கேட்டபோது தரமறுக்கின்றனர்.

இரவு, பகலாக உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் முக்கியமான நிகழ்விற்கு கூட விடுமுறை தர மறுப்பதால் போலீசார் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். மேலும் எனது பெயர் ஸ்டாலின் என்பதால் விடுமுறை கொடுக்க மறுக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை என்று பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வளைதளங்கில் வைரலாகியது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததால் உடனே அவரை அழைத்து விசாரித்து ஸ்டாலின்அப்பன்ராஜூக்கு விடுமுறை வழங்கினார்கள். பின்னர் அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மனஉளைச்சலில் இது போன்று வீடியோவை வெளியிட்டேன். அதிகாரிகள் எனக்கு உடனே விடுமுறை வழங்கி விட்டனர். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசியிருந்தார். இது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வருகிற 16-ந் முதல் 18-ந் தேதி வரை முதல்-அமைச்சர் மதுரை, ராமநாதபுரத்திற்கு வருகிறார். 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது என்பதால் விடுமுறை வழங்க முடியாத நிலை இருந்தது. பின்னர் அவரது நிலை அறிந்து அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு விட்டது என்றார்.

மேலும் செய்திகள்