கரூர்
அம்மன் கோவிலுக்கு 8 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
|புன்னம்சத்திரம் அருகே அம்மன் கோவிலுக்கு 8 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.
அம்மன் கோவில்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை 9 சமூகத்தை சேர்ந்தவர்கள் பரம்பரையாக வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு குடிபாட்டு கோவிலாகவும் இருந்து வந்தது. திருவிழா காலங்களில் 9 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்ற 8 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த கோவிலில் உரிமை இல்லை எனவும், கோவிலுக்குள் வரக்கூடாது என்றும், தங்களது சமுதாயத்திற்கு மட்டுமே இந்த கோவில் சொந்தம் என்றும் கூறி மற்ற சமூகத்தினரை உள்ளே விட மறுத்துள்ளனர். இதன் காரணமாக 8 சமூகத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட அறநிலையத்துறை அதிகாரி மற்றும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அனுமதி மறுப்பு
அதில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்ற 8 சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலில் வழிபடவும், எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், உங்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது என்றும், எந்த முக்கியத்துவமும் கொடுக்க முடியாது என்றும், இந்த கோவில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி எங்களை கோவிலுக்கு விட மறுக்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டு காலமாக எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு செய்து எங்களுக்குரிய உரிமைகளை பெற்று வந்தோம். இந்தநிலையில் இவர்கள் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.