கோயம்புத்தூர்
டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
|வால்பாறையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு வீடு, வீடாக கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
வால்பாறையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு வீடு, வீடாக கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல்
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை உள்ளது. இதை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் காணப்படுகிறது. இதை தடுக்க வால்பாறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணி
இதன் ஒரு பகுதியாக பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்படாத டயர்கள், காலி தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கள ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
பரிசோதனை முகாம்
மேலும் வீடு, வீடாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதோடு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.