அரியலூர்
டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
|டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜீதா, மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.டி. பஞ்சாயத்து தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், திட்ட மேலாளர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, ஊராட்சி ஒன்றிய மேலாளர் தாமோதரன் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் ஜெயங்கொண்டம் ஜூப்பிலி ரோடு அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்கி உள்ளதா?, வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்காய் சிரட்டைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து உட்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.