தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
|தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற வரிசையில் நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது. கேரளா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் பொது சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை குறித்த முழு உடல் வெப்ப பரிசோதனை முழு வீச்சில் உள்ளது. குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.