டெங்கு காய்ச்சல் பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
|தற்போது சிகிச்சை முடிந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி,
தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. தமிழக அரசும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனால், திருச்சியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் விஜயபாஸ்கர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை முடிந்து தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.