< Back
மாநில செய்திகள்
ஆவின் அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்-பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆவின் அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்-பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:00 AM IST

பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆவின் அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில குழு கூட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பெருமாள் மற்றும் பொருளாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது:-

பால் கொள்முதல் விலை

பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பசும்பால் மற்றும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் விற்பனை நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். ஆனால் ஆவின் நிர்வாகம் ஒரு லிட்டருக்கு ரூ.35 மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுக்கக்கூடிய தனியார் நிறுவனத்திற்கு பால் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 25 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர்.

கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

ஆவின் நிர்வாகம் கூடுதல் விலை கொடுக்காமல் விட்டு விட்டால் தற்பொழுது ஆவினுக்கு பால் கொடுத்து வரும் விவசாயிகளும் பால் கொடுக்காமல் நிறுத்தி விடுவார்கள். இதனால் ஆவின் நிர்வாகம் அழிந்து விடும் நிலை உருவாகும். மேலும், பால் கொள்முதல் விலை உத்தரவாதம் இல்லாமல் போய்விடும். ஆவின் அழிந்து விட்டால் தனியார் விலை குறைப்பு செய்து அடிமாட்டு விலைக்கு பால் கொள்முதல் விலையை குறைத்து விடுவார்கள். எனவே இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் அக்டோபர் மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆவின் அலுவலகம் முன்பாகவும், கலெக்டர் அலுவலகம் முன்பாகவும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக அரசுக்கும், அலுவலர்களிடம் மனு கொடுக்கப்படும். இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் சேர்ந்து பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர் நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும். இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்