தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு
|பாஜகவினர் மலிவான அரசியல் பரப்புரை செய்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த 2023 நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜம் புயலாக தீவிரமாகி டிசம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 17, 18 தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால் தமிழ்நாடு அரசு போர் கால வேகத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு பெருமாநகர் மற்றும் எட்டு மாவட்டங்களில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்து போனது. சிறு, குறு நடுத்தரத் தொழில்கள், வணிக செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கடுமையான இயற்கை பேரிடரை மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வான் வழி ஆய்வு செய்தும், நிதியமைச்சர் பேரிடர் பாதிப்புப் பகுதிகளை நேரில் கள ஆய்வும் செய்துள்ளனர். மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான உயர்நிலை அதிகாரிகள் கொண்ட மத்தியக் குழு விரிவான ஆய்வு செய்து, சேதாரங்களை மதிப்பீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, உடனடியாக இரண்டாயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஆரம்ப நிலையில் கோரினார். தொடர்ந்து விரிவான மதிப்பீடு செய்து ரூ.21 ஆயிரத்து 692 கோடி வழங்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் பிரதமரிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
தற்போது பாதிப்புகளை முழுமையாக மதிப்பிட்டு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் பாதிப்பில் இருந்து மீண்டு, மறுவாழ்வு பெறுவதற்கு ரூபாய் 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புயல், பெருமழை இயற்கை பேரிடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசு வழக்கமாக, இயல்பான காலத்திற்கு வழங்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதி தவிர, தற்போது ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொள்ள நிதியுதவி செய்ய மறுத்து, தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருவதையும், மத்திய நிதியமைச்சர் உள்பட பாஜகவினர் மலிவான அரசியல் பரப்புரை செய்து வருவதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, கடுமையான தேசியப் பேரிடராக அறிவித்து, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை முழுமையாக விரைந்து வழங்க வலியுறுத்தி 08.01.2024 திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.