< Back
மாநில செய்திகள்
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 May 2022 10:18 PM IST

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

பொள்ளாச்சி, மே.29-

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி வருகிற 7-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகளும், பொதுமக்களும் கலந்துகொள்ள வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

வருகிற 7-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகள் மற்றும் தொகுப்பு அணைகளை கொண்டு உருவாக்கப்பட்டது பி.ஏ.பி. திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம் ரூ.930 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு ஆழியாறு, பாலாறு படுகை விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்கம், புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் சார்பில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் வருகிற 7-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

துண்டு பிரசுரம் வினியோகம்

பி.ஏ.பி. திட்டம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கிடையில் ஒப்பந்தபடி படி கேரளாவுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் இங்கிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது கண்டிக்கதக்கது. காவேரியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

இங்கிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அரசு அறிவித்து உள்ள இந்த திட்டத்தின் செயல்பாடுகளை நிறுத்த கோரி கோவை, திருப்பூர் மாவட்ட பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து வருகிற 7-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கேட்டு பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

----

Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI

மேலும் செய்திகள்