ஈரோடு
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வட்டக்கிளை தலைவா் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும். பயணப்படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். நகர நில வரி திட்ட கணக்குகளை முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டும். வருவாய் துறை பணிகளை தவிர பிற பணிகள் திணிப்பை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.