வேலூர்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|வேலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வேலூர் தாலுகா சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட துணைசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். வேலூர் தாலுகா தலைவர் வேணுகோபால், செயலாளர் விஜய், பொருளாளர் யாகண்டீஸ்வரராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்புகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வேலூர் தாலுகா துணைத்தலைவர் சீனிவாசன், துணைச்செயலாளர் ரீனா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சதீஷ், வேலூர் மாவட்ட செயலாளர் பிரகலாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்ட செயலாளர் ஜோதி, வட்ட பொருளாளர் குபேந்திரன், துணை செயலாளர் சிவசக்தி, வட்டத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில் வருகிற 24-ந் தேதி அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ேக.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து கோட்டச் செயலாளர் விநாயகம் தலைமை தாங்கினார். இதில் கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கி கோரிக்கைளை வலியுறுத்தி பேசினார். பேரணாம்பட்டு தாலுகா தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயசங்கர், பொருளாளர் வடிவேல், துணைத் தலைவர் கோபி, கிராம நிர்வாக அலுவலர்கள் அருண், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.