< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
13 March 2023 10:03 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும். ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியம் மற்றும் கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

இதேபோல் பழனி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் வட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தலைவர் பிரேம்குமார், பொருளாளர் காத்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழனி தாலுகா பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிலக்கோட்டை

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு வட்டார தலைவர் சைமன் தலைமையிலும், மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு வட்டார தலைவர் சுரேஷ்பாபு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வட்டார தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் மகேஸ்வரன், வட்டார பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வட்டார துணைத்தலைவர் நாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

இதேபோல் நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு வட்டார தலைவர் சுரேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நத்தம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்