தூத்துக்குடி
கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|தூத்துக்குடி, திருச்செந்தூரில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டு வர வேண்டும், வேலையில்லாத காலத்தில் நிவாரணம் அளிக்க மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் தா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர செயலாளர் பா.ராஜா, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாநகர் செயலாளர் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் ஜெபக்கனி ஞானசேகர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் செல்வன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ கணேசன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அமைப்பாளர் சுலைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆண்டி, விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர், ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசூர் ராஜ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர்கள் டிலைட்டா, ரதி அம்மாள், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.