செங்கல்பட்டு
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே மத்திய அரசின் ‘அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்தும், அதை கைவிடக்கோரியும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் வட்டார தலைவர் ஜானகிராமன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கோஷமிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதே சம்பவத்தை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வனிதா மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.