வேலூர்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்புபிரிவு மற்றும் ஆன்மிக பிரிவு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு தொடர்புபிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், அரசு தொடர்புபிரிவு மாவட்ட துணைத்தலைவர் முருகன், ஆன்மிக பிரிவு துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக பிரிவு தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன், அரசு தொடர்புபிரிவு மாநில செயலாளர் சங்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் நடைபெறும் முறைகேடுகளையும், ஊழல்களையும், கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரியும், இவற்றுக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், பா.ஜ.க. அரசு தொடர்புபிரிவு மற்றும் ஆன்மிகபிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாநகர 4-வது மண்டல தலைவர் சதீஷ் நன்றி கூறினார்.