திருநெல்வேலி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
|போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
ராதாபுரம் தாலுகா கூடங்குளம் பகுதியில் மருந்து கடைகள் நடத்திக் கொண்டு, அங்கு பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு போன்ற செயல்களும் செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் நேரடியாக விசாரணை நடத்தி போலி டாக்டர்கள், மருந்து கடையில் சிகிச்சை அளிக்கும் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.