< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி

தினத்தந்தி
|
24 Sept 2024 2:04 PM IST

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளர்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை செய்ய இயலாதபடி, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்படும் தடைகளும், சோதனைகளும், வேதனைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகக் காட்சிகளாகவும், சொல்லொணா துயர தொடர் கதைகளாகவும் தொடர்ந்து கொண்டே உள்ளன.

கடல்மேல் சென்று, தங்களது உயிரைப் பணயம் வைத்து வாழும் அவர்கள், இலங்கை கடற்படையாலும், அந்நாட்டு அரசு சட்ட நடவடிக்கையை காட்டியும், தாக்குதல், வலைகளைப் பறித்தல், இலங்கை சிறையில் அடைத்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல், கொடுமையான அபராதங்களை விதித்து, அவர்களை, அத்தொழிலை செய்ய முடியாது முடமாக்கும் ஈவிரக்கமற்ற செயற்பாடுகளை சந்திக்கின்றனர். இவை அன்றாட அவலங்களாக தொடர்ந்துகொண்டே உள்ளன.

அண்மையில், நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் முறைகளைத்தாண்டி, மேலும் கொடுமையாக அவர்களது தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் மனிதநேயமற்ற செயலையும் இலங்கை அரசு செய்துள்ளது.

இதனைக் கண்டித்து, நமது மீனவர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையை காக்கும் வகையில், மத்திய அரசை வலியுறுத்தி, இலங்கை அரசை கண்டித்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பெருந்திரள் பரப்புரைக் கூட்டம், நாகையில், எனது (கி.வீரமணி) தலைமையில் 1.10.2024 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு எட்டு மணிவரை நடைபெற, நாகை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. முதல் அத்துணை தோழமைக் கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்