காஞ்சிபுரம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பால் விலை உயர்த்தியதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு நகர பொதுச்செயலாளர் டி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வாசன், நிர்வாகிகள் அறிவுடைநம்பி, அஞ்சலிதேவி, நித்தியகுமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர்ஞானசூரியன் தலைமையில் பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பிரேம் குமார் தலைமை தாங்கினார் நகர தலைவர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரச்சார அணி தலைவர் எஸ். சுவாமிநாதன் எஸ். சி. பிரிவு எம். சிலம்பரசன், நகர பொதுச்செயலாளர்கள் தணிகைவேல், முரளி, மாவட்ட பிரசார அணி செயலாளர் கே. பி. அருண்குமார், வக்கீல்கள் பிரிவு மாவட்ட செயலாளர் கே. பாலாஜி மற்றும் அதிக அளவில் பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பால் விலை ஏற்றம், மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து பேசினார்கள். மேலும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர பா.ஜ.க. சார்பில் பால் விலை, சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து நந்திவரம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர பா.ஜ.க. தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மதுபாலா, கலா அறிவுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அமைப்பாளராக மாநில நிர்வாகிகள் பாஸ்கர், மோகன் குமார், ஆகியோர் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினார்கள்.
மேலும் கலந்து கொண்ட அனைவரும் தமிழக அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் படாளம் ஜெபராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, வெங்கடேசன் பேருராட்சி மண்டல தலைவர் சக்தி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.