சென்னை
திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்கு இடையூறாக இருந்த கோவில் இடித்து அகற்றம்
|திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்கு இடையூறாக இருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.
திருவொற்றியூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் அண்ணாமலை நகர்-கிராமத்தெரு இடையே ரெயில்வே தண்டவாளத்தின் கீழே ரூ.30 கோடியில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது. இதற்கு இடையூறாக இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அண்ணாநகர் பிரதான சாலையில் உள்ள முப்பெரும் தேவி பெரியபாளையத்தம்மன் கோவிலை இடிக்கும் பணி நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவிலை இடித்து அகற்றினர். முன்னதாக 70 ஆண்டுகள் பழமையான அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேதமின்றி பத்திரமாக அப்புறப்படுத்தினர். கோவில் கட்டிடம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிகிறது.