< Back
மாநில செய்திகள்
பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்
திருச்சி
மாநில செய்திகள்

பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
6 Nov 2022 10:14 PM GMT

பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

கொள்ளிடம் பாலம்

திருச்சி மாநகரையும் புறநகரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் முக்கிய பாலமாக இருந்தது. நாளடைவில் பாலம் வலுவிழந்ததால் அதில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பாலத்தை பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காகவும், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இடிக்கும் பணிகள் தொடங்கியது

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்ட உபரி நீரால், அந்த பழைய பாலத்தில் 18 மற்றும் 19-வது தூண்கள் அரிக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த இரண்டு நாட்களில் 3 தூண்கள் இடிந்து விழுந்தன.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலும் 2 தூண்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பாலத்தை இடிப்பதற்கு தமிழக அரசால் ஒப்பந்தம் விடப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட நவீன எந்திரங்களை பயன்படுத்தி பழைய பாலம் இடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்