< Back
மாநில செய்திகள்
தூய சந்தியாகப்பர் ஆலயம் இடிக்கும் பணி தொடங்கியது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தூய சந்தியாகப்பர் ஆலயம் இடிக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி
|
23 Jan 2023 12:15 AM IST

தங்கச்சிமடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூயசந்தியாகப்பர் ஆலயம் இடிக்கும் பணி தொடங்கியது.

ராமேசுவரம்,

தங்கச்சிமடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூயசந்தியாகப்பர் ஆலயம் இடிக்கும் பணி தொடங்கியது.

தூய சந்தியாகப்பர் ஆலயம்

ராமேசுவரம் தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது தூய சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயம் தூய தெரசாள் ஆலயம் பங்கின் கீழ் செயல்பட்டு வருகின்றது. மிகவும் பழமை வாய்ந்த தூய சந்தியாகப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10 நாட்கள் திருவிழா திருப்பலி மிகச் சிறப்பாக நடைபெறும்.

கொடியேற்றம் தொடங்கியதில் இருந்து தேர்பவனி நடைபெற்று திருவிழா முடியும் வரையிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் இ்ங்கு தங்கி இருந்து திருப்பலி பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் இந்த சந்தியாகப்பர் கோவில் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவே ஆண்டுதோறும் இந்த திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும்.

இடிக்கும் பணி

சுமார் 450 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த இந்த தூய சந்தியாகப்பர் ஆலயத்தை இடித்து விட்டு புதிய சந்தியாகப்பர் ஆலயம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது உள்ள ஆலய கட்டிடமானது பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் புதிய ஆலயம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

புதிதாக தூய சந்தியாகப்பர் ஆலயம் கட்டும் பணியானது சிவகங்கை மறை மாவட்டம் மற்றும் பங்கு மக்கள் ஒத்துழைப்போடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு திருவிழா தொடங்குவதற்கு முன்பாக புதிய ஆலய கட்டிடத்தை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Tags :
மேலும் செய்திகள்