அரியலூர்
ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்
|ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகர்பாளையம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி(60) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் பாலமுருகன், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், மகள் ஆனந்தி மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் அப்பகுதியில் வசித்து வருவதாக தெரிகிறது. மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை செலுத்தியுள்ளனர். மேலும் ஊராட்சி மூலம் கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, மாற்று இடம் வழங்காத நிலையில், அந்த வீட்டை வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். அப்போது, அங்கு 40 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், எனவே வீட்டை காலி செய்ய வருவாய் துறையினரிடம் கால அவகாசம் கேட்டும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் குடும்பத்துடன் கண்ணீர் மல்க போராடினர். இருப்பினும் அந்த வீடு இடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டனர். இருப்பினும் அதிகாரிகள் கால அவகாசம் தர இயலாது என்று மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டா வழங்க மேலதிகாரியிடம் கலந்து பேசி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.