விழுப்புரம் அருகே மாதா கோவில் இடித்து அகற்றம்.. கதறி அழுத பெண்கள்
|மாதா கோவில் இடித்து அகற்றப்பட்டதையடுத்து விழுப்புரம் அருகே ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக அங்குள்ள ராகவன் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ராகவன் வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்கு செல்லும் கிளை வாய்க்கால் கரையின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான மாதா கோவிலை கிராம மக்கள் கட்டி வழிபட்டார்கள். இந்நிலையில் ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ராகவன் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதா கோவிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து பருகம்பட்டு மாதா கோவிலை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் இன்று வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள். அப்போது, மாதா கோவிலை இடிக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அப்போது மாதா கோவிலை இடிக்க விடாமல் சிலர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் ஊர்மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதன்பிறகு மேல்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையை அகற்றிய போது அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர். ஒரு கட்டத்தில் மாதா கோவிலை இடிக்க முற்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பலத்த போராட்டத்திற்கு நடுவே மாதா கோவில் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும், பதற்றமும் நீடித்தது.