தஞ்சாவூர்
60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீடு, கடைகள் இடிப்பு
|60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீடு, கடைகள் இடிப்பு
தஞ்சை கீழவாசல் அகழி கரையில் 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீடு, கடைகள் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அகழி
தஞ்சை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் வகையில் மன்னர்கள் காலத்தில் அகழி வெட்டப்பட்டது. இந்த அகழி தஞ்சை பெரிய கோவில் பின்பகுதியில் இருந்து தொடங்கி மேலவீதி, வடக்கு வீதி, கொடிமரத்துமூலை வழியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே வரை செல்கிறது.
இந்த அகழிக்கு மழை காலங்களில் பெய்யும் வெள்ளம் மற்றும் கல்ணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். கீழவாசல் பகுதியில் உள்ள இந்த அகழியில் வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள கரையில் ஏராளமானோர் கடை, வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் குடியிருந்து வருகிறார்கள்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகரில் உள்ள அகழிகரையை பலப்படுத்தி அகழியை தூர்வாரி அதில் படகு விட மாநகராட்சி திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தற்போது அகழி கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்றி வருகிறது.
அதன்படி வண்டிப்பேட்டை பகுதியில் அகழி கரையில் குடியிருந்த வீடு, கடைகளின் உரிமையாளர்கள் என 19 பேருக்கு இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியது. அதன்படி கட்டிடங்களில் குடியிருந்தவர்கள் அதில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
பொக்லின் எந்திரம்
பொக்லின் எந்திரம் உதவியுடன் கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.