திருச்சி
திருச்சி கருமண்டபத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்
|திருச்சி கருமண்டபத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பொன்னகர் முதல் பிராட்டியூர் வரை சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருமண்டபம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் கருமண்டபம் இளங்காட்டுமாரியம்மன் கோவில் அருகே இருந்து தேசிய கல்லூரி வரை நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையின் ஒரு பக்கத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன் உத்தரவின்பேரில், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டன. ஒரு சில இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.