பெரம்பலூர்
அகரம்சீகூர், ஒதியம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்
|அகரம்சீகூர், ஒதியம் கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனைதொடர்ந்து குன்னம் உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
25 கடைகள் அகற்றம்
இதில், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில், 25 கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொண்டனர். ஒரு சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கினர்.
அதன்பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்களின் கடைகளை நெடுஞ்சாலைத்துறை தானாக முன்வந்து அகற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒதியம் கிராமம்
குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை விரிவாக்கம் செய்து புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் தார் சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தது. இதில் சாக்கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே சாக்கடை அமைப்பது தடைபட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே வீடுகள் முன்பு தேங்கியது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற குன்னம் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் குன்னம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன் மேற்பார்வையில் அளவீடு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.