கள்ளக்குறிச்சி
பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
|தினத்தந்தி செய்தி எதிரொலியால் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு
அரசு உயர்நிலைப்பள்ளி
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சீர்பாதநல்லூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் சீர்பாதநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் ஒன்று சேதம் அடைந்து காணப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை கட்டிப்போட்டு தொழுவமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்நடை கழிவுகளால் துர்நாற்றம் வீசியதோடு, கொசுத்தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்தது.
மாணவர்கள் கோரிக்கை
இதன் காரணமாக மாணவ-மாணவிகள் சிலர் பள்ளிக்கு வர தயக்கம் காட்டினர். எனவே பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று மாணவ-மாணவிகள், பெற்றோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தினத்தந்தி பத்திரிகையில் செய்தி-படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அதை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.