சென்னை
போரூரில் குளத்தின் நடைபாதையில் இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
|போரூரில் குளத்தின் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த அம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள 9 குளங்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 கோடியில் சீரமைக்கப்பட்டன. அதில் போரூர் ஆஞ்சநேயர் கோவில் குளமும் ஒன்று.
இந்த கோவில் குளம் பராமரிப்பு பணிகள் முடிந்து குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குளம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் போரூர் குயப்பேட்டை, ஆற்காடு சாலையோரம் இருந்த தேவி கருமாரியம்மன் கோவில் மெட்ரோ ரெயில் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டது. இதற்காக கோவில் நிர்வாகத்துக்கு ரூ.13 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அகற்றப்பட்ட அம்மன் சிலையை கோவில் நிர்வாகிகள், முறைப்படி திறக்கப்படாத இந்த ஆஞ்சநேயர் கோவில் குளத்தில் நடைபாதை அருகே தற்காலிகமாக தகர கொட்டகை அமைத்து வைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தினமும் வழிபட்டு வந்தனர்.
மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தின் கரையில் உரிய அனுமதியின்றி கோவில் அமைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து ஆஞ்சநேயர் கோவில் குளத்தில் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலையுடன் உள்ள கோவிலை நேற்று மாநகராட்சி அதிகாரிகள், போரூர் போலீசார் பாதுகாப்புடன் வந்து அதிரடியாக அகற்றினர்.
அங்கிருந்த அம்மன் சிலையை அகற்றி மதுரவாயல் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக இந்த கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, "மெட்ரோ ரெயில் பணிக்காக கோவில் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் வழங்காததால் கோவில் குளத்தின் நடைபாதை அருகே வைத்து வழிபட்டு வந்தோம். ஆனால் அதனை முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே தமிழக அரசு மீண்டும் அந்த கோவில் கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும்" என்றனர்.
இதையடுத்து மீண்டும் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு அந்த கோவில் குளத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு விட்டனர்.