< Back
மாநில செய்திகள்
பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றம்
கடலூர்
மாநில செய்திகள்

பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றம்

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

கடலூரில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

ஆக்கிரமிப்பு வீடுகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் நெடுஞ்சாலைநகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க சென்ற போது, அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் வீடுகளை தாமாக முன்வந்து இடிக்க, அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இதனால் நேற்று ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகே வீடுகளை அகற்ற வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இடித்து அகற்றம்

அப்போது அதிகாரிகள், ஏற்கனவே உங்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. ஆகவே வீடுகளை இடித்து அகற்ற உள்ளோம் என திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை சாக்கு பைகளில் கட்டி, கொண்டு சென்றனர். சிலர் பாத்திரங்களை அருகில் உள்ள வீடுகளின் முன்பு வைத்துவிட்டு, கதறி அழுதபடி இருந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 7 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதும், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்