< Back
மாநில செய்திகள்
கடைக்கு இடையூறாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் நிழற்கூடம் இடிப்பு-போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கடைக்கு இடையூறாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் நிழற்கூடம் இடிப்பு-போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
22 May 2022 6:08 PM GMT

கடைக்கு இடையூறாக இருப்பதாக கூறி கிருஷ்ணகிரியில் நிழற்கூடம் இடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்தி சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. பலத்த மழையால் சேதம் அடைந்ததால் கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய நகர்மன்ற தலைவர் தங்கமுத்து ரூ.3 லட்சம் தனது நிதியில் புதிய நிழற்கூடம் அமைத்து தந்தார். இந்த நிழற்கூடத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த நிழற்கூடத்தின் பின்புறம் கடை வைத்துள்ள நபர் தனது கடைக்கு இடையூறாக நிழற்கூடம் இருப்பதாக கூறி நேற்று முன்தினம் இரவு டிராக்டர் வைத்து இடித்து சேதப்படுத்தினார். மேலும் நகராட்சி அலுவலகத்தில் தனது கடை முன்பு உள்ள நிழற்கூடம் சேதமடைந்து விட்டதாகவும், வேறு இடத்தில் நிழற்கூடம் அமைத்து தருவதாகவும் கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தான் அமைத்து தந்த நிழற்கூடத்தை இடித்து சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட நிழற்கூடம் இரவு நேரத்தில் டிராக்டர் வைத்து இடிக்கப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்