திருச்சி
வடகிழக்கு பருவமழை நீரை குளம், குட்டைகளில் சேமித்து வைக்க கோரிக்கை
|நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வடகிழக்கு பருவமழை நீரை குளம், குட்டைகளில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி தொடங்க உள்ளதாக தமிழக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து பெய்து குளம், குட்டைகள், ஊரணிகள் நிரம்பி வழிந்தோடும். ஆனால் தற்போது வரத்து வாய்க்காலை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்குவதில்லை, ஊர்களிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி தொற்று நோய்கள் பரவி வருகிறது.
25 ஆயிரம் குளங்கள்
தமிழ்நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1,783 குளம், குட்டைகளும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 549 குளம், குட்டைகளும், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 491 குளம், குட்டைகளும், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 5,334 குளம், குட்டைகளும், மதுரை, திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் 3,391 குளம், குட்டைகள் என தமிழகத்தில் 25 ஆயிரம் குளங்கள் உள்ளன. குட்டைகள், ஊரணிகள் என 89 ஆயிரம் உள்ளது. மேற்படி குளங்கள் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதற்கு காரணம் மழைநீரை குளம், குட்டை, ஊரணிகளில் சேமித்து வைக்காததாலும், வரத்து வாய்க்காலை தூர்வாரததே காரணம். எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வருகிற அக்டோபர், நவம்பர், மாதங்களில் பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை நீரை தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகளிலும், ஊரணிகளிலும் சேமித்து வைக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.