அரியலூர்
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை
|பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிர்வாகி செல்லதுரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தலைவராக துரை என்ற மகாதேவன், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக மணக்கரை அழகர் உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. கூட்டத்தில், பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும். பால் உற்பத்தி செய்யும் அனைவருக்கும் முறையாக போனஸ் வழங்கிட வேண்டும். ஆவின் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். இடைக்கட்டு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மகாசபையை கூட்டி வெளிப்படையாக வரவு, செலவு கணக்கை தெரியப்படுத்த வேண்டும். இடைக்கட்டு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்னும் கூடுதலாக 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். கொல்லாபுரத்தில் பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், கால்நடைகளுக்கு உரிய மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.