பெரம்பலூர்
ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
|ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடுவாசல் கிராமத்தின் வழியாக வளம் சேர்க்கும் மருதையாறு பாய்ந்தோடுகிறது. சங்கிலித்தொடர் ஏரிகளில் ஒன்றான துறைமங்கலம் பெரிய ஏரியை நிரப்பி வெளியேறும் நீரானது ஒரு வாய்க்கால் வழியே வந்து நெடுவாசல் பகுதியில் மருதையாற்றில் சேர்கிறது. பெரம்பலூர் நகராட்சியின் சார்பில், கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இந்த வாய்க்காலின் கரையில் அமைக்கப்பட்டது. முதலில் சுத்திகரிக்கப்பட்டு வாய்க்கால் வழியே மருதையாற்றில் விடப்பட்டாலும் நாளடைவில் அந்த நீரில் துர்நாற்றம் வீசுவது, நுரை பொங்கி ஓடுவது உள்ளிட்ட காரணங்களினால் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள், தொற்றுநோய்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்டவைகளையும் எதிர்கொள்கிறோம். இந்த நீரைக்குடித்து பல கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இது தொடர்பாக பல போராட்டங்களை நடத்தியும், பல வழிகளில் மனுக்களை அளித்தாலும் நிரந்தரத் தீர்வு இன்னும் எட்டப்பட்டவில்லை. மாறாக சில நாட்களுக்கு மட்டுமே துர்நாற்றம் வீசாமல் வருகிறது. பிறகு மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது. மேலும் எங்கள் கிராமத்தில் கொசுத் தொல்லையும் கூடுதலாக காணப்படுகிறது.
இந்த பிரச்சினையால் மக்கள் மட்டுமல்லாமல் வளம் சேர்த்த மருதையாறும் பாதிக்கப்பட்டு தற்போது மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நீர் தான் சுமார் ரூ.149.04 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு 4,194 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு பாசனம் வழங்கவுள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு தினமும் செல்கிறது. அரசு நிர்வாகங்கள் சார்பில் சுத்திகரிக்கப்பட்டு விடப்படுவதாக சொல்லப்பட்டாலும் துர்நாற்றம் வீசுவது, நுரை பொங்கி ஓடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மருதையாறும், மக்களும், கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்கிறது. எனவே வாழ்வளிக்கும் மருதையாறு மற்றும் மக்கள் நலன் கருதி இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதோடு, இதே வாய்க்காலின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சியின் குப்பைக் கிடங்கையும் விரைந்து முறையாக அகற்றி அந்த பகுதியில் மரக்கன்றுகளை கூடுதலாக நடவு செய்ய வேண்டும்.