திண்டுக்கல்
சம வேலை, சம ஊதியம் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி; மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
|சம வேலை, சம ஊதியம் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துராமசாமி, பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாநில பொதுச்செயலாளர் முத்துராமசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டதை போல் மாநில அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது வருத்தமளிக்கிறது. ஆசிரியர்களுக்கு சமவேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
மேலும் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் 2 ஆயிரத்து 500 பேரையும், 2 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி நியமனம் தற்காலிக பணி நியமனமாக இல்லாமல் நிரந்தர பணி நியமனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.