< Back
மாநில செய்திகள்
ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
வேலூர்
மாநில செய்திகள்

ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
16 March 2023 5:58 PM GMT

வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் உதவி- கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேலூர் வருவாய் கோட்ட பகுதி ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கோடை காலம் வர உள்ளதால் ஏரி, குளங்களில் நீர் குறைந்து வருகிறது. எனவே இந்த நேரத்தில் அடுத்த பருவமழையை முன்னிட்டு அனைத்து நீர் நிலைகளையும், நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

ஊசூரில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று பூதூரிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

மானியம்

மாட்டு கொட்டகை அமைப்பதற்கு மானியம் வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க பசு மாடு வாங்கவும் மானியம் வழங்கப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் ஆவின் பால் பூத்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தீவனம் மற்றும் உரங்களை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அறுவடை கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளதால் அந்தத் தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே கரும்புக்கான தொகையை டன்னுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதில் அளித்த அதிகாரிகள், ''உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு பரிந்துரைக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்