அரியலூர்
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை
|ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பு கூட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்து பேசினார். துணைத் தலைவர் ராமசாமி வரவேற்று பேசினார். செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி இயக்க வரவு, செலவு மற்றும் நீத்தார் நிதி உதவி திட்ட வரவு, செலவை வாசித்தார். நிர்வாகி கதிர்வேல் குறள் விளக்கம் அளித்தார். நிர்வாகி சண்முகசுந்தரம் செய்தித்தாள் வாசித்தார். கூட்டத்தில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பழுதடைந்து கைவிடப்பட்டுள்ள பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். பயணிகள் அமர்வதற்கு நிழற்குடையும், இலவச சுகாதார கழிப்பிட வசதியும், சைக்கிள் நிறுத்தத்திற்கான ஒரு கட்டிடத்தையும் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, நகரின் பிற இடங்களுக்குச் செல்ல ஷேர் ஆட்டோ வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கி வருவதை போன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அந்தந்த தேதியிலேயே வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகி ராஜேந்திரன் நன்றி கூறினார்.