தஞ்சாவூர்
ஆற்றில் வளரும் மீன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மீன்பிடி தொழிலாளர்கள்
|ஆற்றில் வளரும் மீன்களை பாதுகாத்து, இயற்கையான முறையில் மீன்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றில் வளரும் மீன்களை பாதுகாத்து, இயற்கையான முறையில் மீன்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்று மீன்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் அரசலாறு நீரொழுங்கி பகுதியில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி ஆற்றில் நீந்தி வரும் மீன்களை பிடித்து வியாபாரம் செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அரசலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரொழுங்கி பகுதியில் அதிகாலை 5 மணி முதலே மீன்பிடிக்க தொடங்கி விடுகிறார்கள். காலை 8 மணி வரை மீன்பிடித்து, அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் நாள்தோறும் 50 முதல் 200 கிலோ வரை மீன்கள் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வருவாய்
காவிரி ஆறு உற்பத்தியாவது முதல் கடந்து வரும் பாதைகளில் இயற்கையான முறையில் நன்னீர் மீன்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த மீன்கள் ஆற்று நீரோட்டத்தில் கடைமடை வரை நீந்தி செல்கின்றன. இயற்கையான முறையில் உற்பத்தியாகும் இந்த ஆற்று மீன்களை பிடித்து சமைத்து உண்பதில் அசைவ பிரியர்களிடம் விருப்பம் அதிகம்.
இதனால் ஏராளமான தொழிலாளர்கள் ஆங்காங்கே ஆற்று நீரில் நீந்தி வரும் மீன்களை பிடித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் உள்ள அரசலாற்றின் நீரொழுங்கி பகுதியில் ஏராளமான மீன்கள் சிக்குவதால் இங்கு மீன்பிடி தொழில் நடப்பதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
கணிசமாக குறைந்தது
இதுகுறித்து மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பார்த்திபன் கூறுகையில், 'ஆற்றில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி வளரும் மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. நான் எனது தந்தையின் காலத்தில் இருந்து இதுபோல் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறேன். முன்பு ஆற்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் மீன்களின் உற்பத்தி கணிசமாக குறைந்து ஆற்றில் மீன் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
முற்றிலும் இயற்கையான முறையில் வளரும் ஆற்று மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு இருப்பதால் அரசு கவனம் செலுத்தி ஆற்றில் மீன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் எங்களைப் போன்ற உள்ளூர் தொழிலாளர்கள் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்' என்றார்.