< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதம்

தினத்தந்தி
|
10 Jan 2023 12:49 AM IST

ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி டோக்கன் பெற்றவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ரேஷன் கடைகள் முன்பு கூடினர். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதமாக தொடங்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் பயோமெட்ரிக் எந்திரத்தில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதியப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால் மேலும் தாமதம் ஆனது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளிலும், அரியலூர் மாவட்டத்தில் சில கடைகளிலும் சர்வர் கோளாறு காரணமாக பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை சரியாக பதியாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

வாக்குவாதம்

இதனால் சில கடைகளின் முன்பு வரிசையில் நின்றிருந்த குடும்ப அட்டைதாரர்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது. வரிசையில் நின்ற குடும்ப அட்டைதாரர்களில் முதியவர்கள் நிற்க முடியாமல் தரையில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நிற்க முடியாமல் நிழல் இருந்த பகுதியில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டனர். குடிநீர் வசதி இல்லாததால் பலர் தாகத்தால் தவித்தனர். சிலர் பிறகு வந்து வாங்கி கொள்ளலாம் என்று வீட்டிற்கு சென்று விட்டனர்.

சிலருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை

சில குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கு சென்று டோக்கன் வழங்கப்படாததால், அவர்கள் ரேஷன் கடைக்கு வந்து டோக்கன் வாங்கி சென்றதை காண முடிந்தது. சர்வா் கோளாறால் ஒரு குடும்ப அட்டைதாரர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி சென்றதையும் காண முடிந்தது.

இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களிடம் மின்னணு குடும்ப அட்டை வாங்கப்பட்டு, அவர்களிடம் பதிவேடுகளில் கையொப்பம் பெற்று பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். சர்வா் கோளாறு சரியான பிறகு அந்த குடும்ப அட்டைதாரர்கள் வரவழைக்கப்பட்டு பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதியப்பட்டு மின்னணு குடும்ப அட்டையும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மேலும் சில ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றின் எடை குறைவாக இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் குற்றம்சாட்டினர்.

மீன்சுருட்டி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. இதில் பயோமெட்ரிக் எந்திரத்தில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதியப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்க முற்பட்டனர். ஆனால் காலை 10 மணியில் இருந்து பயோமெட்ரிக் எந்திரம் செயல்படவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த குடும்ப அட்டைதாரர்கள் விரக்தி அடைந்து வீட்டிற்கு செல்ல தொடங்கினர். பின்னர் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மேல் அதிகாரிகளுக்கு விவரத்தை எடுத்துக்கூறி, தயார் நிலையில் வைத்திருந்த பதிவேடுகள் மூலம் ேரஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்கள்.

சாமியானா பந்தல்-குடிநீர் வசதி

இது குறித்து பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரி கூறியதாவது:- ஏற்கனவே ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரம் சரியாக வேலை செய்யாது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதையும் பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பதிந்தே வழங்கப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே சர்வர் கோளாறால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில பெண்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றை முன்னதாக எடை போட்டு தனித்தனியாக பையில் போட்டு வைத்திருந்து கொடுத்திருக்கலாம். பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி செல்ல மஞ்சள் பை வழங்கியிருக்கலாம். வெயிலை சமாளிக்க சாமியானா பந்தல் போட வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பச்சரிசி-சர்க்கரை எடை குறைவு

பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த செல்லையா:- எங்கள் ரேஷன் கடையில் முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. சர்வர் கோளாறால் தாமதம் ஏற்பட்டதால் ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றின் எடை குறைவாக இருந்தது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகே சரியான எடையுடன் வழங்கப்பட்டது. டோக்கனில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிடாததால் டோக்கன் பெற்றவர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததால் மூச்சுக்கூட விட முடியாத அளவுக்கு கூட்ட நெருக்கடி காணப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொங்கல் பரிசு தொகுப்பினை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதியவர்களுக்கு முன்னுரிமை

பெரம்பலூரை சேர்ந்த ராமசாமி:- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. அவர்களும் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து விட்டனர். அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்