ராமநாதபுரம்
பாம்பன் ரெயில் பாலத்தை டெல்லி அதிகாரி ஆய்வு
|பாம்பன் ரெயில் பாலத்தை டெல்லி அதிகாரி ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த புதிய ரெயில் பாலத்தின் பணி மற்றும் தற்போதுள்ள பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து ரெயில்வே வாரிய பிரிவின் செயல் இயக்குனர் விகாஸ் குமார் நேற்று பாம்பன் வந்தார்.
பாம்பன் ரெயில்வே நிலையத்திலிருந்து ட்ராலி மூலம் தற்போதுள்ள பாம்பன் ரெயில் பாலத்தை பார்த்து ஆய்வு செய்தபடி தூக்கு பாலத்திற்கு சென்றார்.தூக்கு பாலம் மற்றும் கடலுக்குள் அமைந்துள்ள ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்தார். அப்போது தூக்கு பாலம் ஆய்வுக்காக திறந்து மூடப்பட்டது.
தூக்கு பாலத்தில் நின்றபடியே அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளையும் ஆய்வு செய்தார்.அப்போது அவருடன் ஆர்.வி.என்.எல். துணை பொது மேலாளர் சீனிவாசன், ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட அதிகாரி பத்மநாபன், மதுரை கோட்டைபொறியாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின்பு ரெயில்வே வாரிய செயல் இயக்குனர் விகாஸ் குமார் கூறியபோது:-
பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலம் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளது. பாம்பன் கடலில் அருகில் ஆர்.வி.என்.எல் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளும் வேகமாகவே நடைபெற்று வருகின்றது என்றார்.
முன்னதாக ரெயில்வே வாரிய சிவில் பிரிவின் செயல் இயக்குனர் விகாஸ் குமார் ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்ததுடன் பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தனுஷ்கோடி பகுதிக்கும் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரெயில் பாதை அமையவுள்ள இடங்கள் குறித்தும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.