< Back
மாநில செய்திகள்
2-வது ரோப்கார் திட்ட பணிகளில் தொய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

2-வது ரோப்கார் திட்ட பணிகளில் தொய்வு

தினத்தந்தி
|
9 Oct 2023 11:00 PM GMT

பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் பணிகளில் தொய்வு அடைந்துள்ளது.

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை வழியே சென்று வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதில் சென்றுவர வசதியாக ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. விரைவான பயணம், சுற்றுலா அனுபவம் கொண்டதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்லவே விரும்புகின்றனர்.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்காரில் பயணிக்க (ஒருமுறை செல்ல) கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இதற்காக ரோப்கார் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளன. வாரவிடுமுறை, மாத கிருத்திகை மற்றும் விசேஷ காலங்களில் ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக விசேஷ நாட்களில் ரோப்காரில் பயணிக்க டிக்கெட் கவுண்ட்டரையும் தாண்டி கிரிவீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்க்க முடியும்.

2-வது ரோப்கார்

எனவே பழனியில் 2-வது ரோப்கார் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து 2-வது ரோப்கார் அமைப்பதற்காக முதல் ரோப்கார் நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக அஸ்திவாரம் கட்டி ரோப்கார் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதையடுத்து இயல்பு நிலைக்கு வந்த பின்னரும் 2-வது ரோப்கார் திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அறநிலையத்துறை அதிகாரிகள் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது 2-வது ரோப்கார் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் 2-வது ரோப்கார் திட்ட பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் திட்டம் ரத்து செய்யப்பட்டதா? என பக்தர்கள் இடையே கேள்வி எழுந்தது. மேலும் 2-வது ரோப்கார் திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடுதல் திட்ட மதிப்பீடு

இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, 2-வது ரோப்கார் பணிக்கு கூடுதல் திட்ட மதிப்பீடு கோரப்பட்டு வருகிறது. எனவே பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. திட்ட மதிப்பீடு உயர்வால் பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு புதிதாக டெண்டர் விட்டால் தான் பணிகளை தொடங்க முடியும். இதுகுறித்து அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்